Wednesday, February 22, 2012

எங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்!



ஆசிரியர்: சாளை M.A.C. முஹம்மத் மொஹிதீன்
அமெரிக்காவில் பணி புரியும், காயல் பூர்விக சமூக ஆர்வலர்


பொதுவாக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 'மாணவன்...ஆசிரியரை, சக மாணவர்களை துப்பாகியால் சுட்டு கொன்றான்' என்று கேள்விபடுவோம். ஆனால் இன்று நமது மாநிலத்தில் '9ம் வகுப்பு மாணவன் ஆசிரியை கொலை செய்த பயங்கர சம்பவம்' எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தனையும் 'மேற்கத்திய' மயமாகி வரும் நமது நாட்டில் 'தனிநபரை' முன்னிறுத்தும் அவர்களது வாழ்க்கைமுறை மட்டும் விதிவிலக்கா என்று நினைக்க தோணுகிறது. 

சில ஊடகங்கள் அம்மாணவனின் பெயரை வெளியிட்ட போது நமக்கு இன்னும் பேரதிர்ச்சி. 'பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்' என்று இஸ்லாம் சொல்லித்தந்த அளவுக்கு வேறெந்த மதமும் சொல்லிதந்திருக்காது. இருப்பினும் நமது மாணவ சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது... சமுதாயத்தினராகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதனை சற்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஏனென்றால் 'வாழ்க்கை' எனும் சுழல்சக்கரத்தில் நாம் அனைவரும் 'வெறும் இயந்திரங்களாக' மாறி, இஸ்லாம் கற்றுத்தந்த குழந்தை வளர்ப்பு முறையினை மறந்து வருகிறோம் என்றால் மிகையாகாது. அதற்க்கான அறிகுறி தான் இது போன்ற நிகழ்வுகள்.

"எனக்கென்று தனி அறை, செல்லமான வளர்ப்பு, `ரிப்போர்ட்' கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்து பாசத்தையும் செலவுக்கு பணம் தருவதையும் நிறுத்தி விட்ட கண்டிப்பான (?) அப்பா" கொலை செய்ய தூண்ட முதற்காரணமாகி போனது. அடுத்து வன்முறையான சினிமா. பொதுவாக சினமாவில் தான் 'கிளைமாக்ஸ்' வரும். ஆனால் இவ்விசயத்தில் 'சினிமாவே' கிளைமாக்ஸ் ஆக துணை போனது வேறு விஷயம். இறைவன் நாடினால் மற்ற காரணங்களை இரண்டாம் பகுதியில் விரிவாக பேசலாம். 

எளிமையான, நல்ல பிள்ளைகளை ஒப்பிட்டு தனது பிள்ளைகள் அடம்பிடித்து கேட்ப்பவைகளை நாசூக்காக தட்டிகழித்த காலம் போய்... பாக்கட் மணி, கணினி, மடிக்கணினி, அலைப்பேசிகள் மற்றும் ஏனைய நவீனகாலத்து பொழுதுபோக்கு சமாச்சாரங்களை பிள்ளைகள் கேட்டவுடன் வாங்கி தந்து அழகு பார்ப்பதும், பின்னர் அவர்கள் 'நடவடிக்கைகள்' சரியில்லை என்றவுடன் அனைத்தையும் ஒரே நாளில் 'கட்' செய்யும் போது ஏற்படும் 'மன அழுத்தத்தினால்' இது போன்ற 'குற்றங்களுக்கு' தள்ளபடுகின்றார்கள். கேட்டதையெல்லாம் வாங்கி தருவதைவிட, அப்பருவத்தில் அவர்களுக்கு தேவைதானா என்று சிந்தியுங்கள். ஒரே மகன் அல்லது மூன்று பெண்பிள்ளைகளில் ஒரு ஆண்பிள்ளை என்றால் பெற்றவர்கள் கொடுக்கும் செல்லம் இருக்கிறதே... நானெழுதி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும தீயவராவதும் அன்னை வளர்பதிலே". நிலவைக்காட்டி சோறூட்டிய அன்னை இன்று டி.வி. சீரியலைக் காட்டி அமுதூட்டும் கொடுமை. தொலைக்காட்சிகள் இல்லாத காலங்கள் போய் பஜ்ர் முதல் நள்ளிரவு வரை இசை, படங்கள், சீரியல்கள் என பெரும்பாலும் சினிமா நிகழ்ச்சிகள். சில பெரியவர்களும் விதி விலக்கல்ல. சிறுவயதிலேயே என் மகள் 'குர்ஆனை' மனனம்/ஓதி முடித்து விட்டாள் என்று அங்கலாய்த்த காலம் போய், என்ன அழகாக 'கொலை வெறி' பாடலை பாடுகிறாள், 'வாடி வாடி நாட்டு கட்...' பாடலுக்கு நடனம் ஆடுகிறாள் என்று பெருமைபட்டு கொள்ளும் இன்றை மாடர்ன் தாய்மார்கள்.

'பாய்' கடையில் போய் வாப்பாவுக்கு சிகரட் வாங்கி வாம்மா மற்றும் முசிபத்து, பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு, ஹயாத்தளி... (மீதியை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்) என்று திட்டும் பெற்றோர்களும் இன்றும் நமதூரில் இருக்கிறார்கள். காலங்கள் மாறியுள்ளதே தவிர காட்சிகள்/வாசகங்கள் இன்னும் வாழையடி வாழையாக அப்படியேதான் இருக்கின்றன. எதை விதைத்தோமோ அதுதான் முளைக்கும் என்பதற்க்கு சாட்சியாக.

தவறு செய்யும் தம் பிள்ளைகளை கண்டிக்காமல், என் மகன் அப்படியெல்லாம் ஒருக்காலும் செய்ய மாட்டான் என்று கண்மூடித்தனமாக ஒத்து ஊதுவதும், பெண் பிள்ளைகளை மட்டும் ஒழுக்கத்துடனும் நற்பண்புகளுடனும் வளர்த்தால் போதும் ஆண் பிள்ளைகள் ஒரு வயசில் கொஞ்சம் 'அப்படி இப்படிதான்' இருக்கும். பின்னொரு காலத்தில் சரியாகி விடுவார்கள் என்ற அதீத நம்பிக்கையில் கண்டும் காணாது விட்டு விடுகிறார்கள். ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா... இதனாலேயே படிப்பில்/வாழ்க்கையில் கவனம் சிதறி 'திசைமாறிய' பறவைகள் ஏராளம். 

"...ஒரு பெண் அவளது கணவனுக்கும் அவனது குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்பு பற்றி (மறுமையில்) கேள்வி கேட்கப்படுவாள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உம்ர் (ரலி) நூல் - புஹாரி

சமீபத்தில் ஒரு நண்பரை பல வருடங்கள் கழித்து நமதூரில் சந்தித்தேன். வியாபாரத்திற்காக அவர் வேறொரு ஊரிலும், படித்த மனைவி இன்னொரு நகரத்திலும், அவர்களின் ஒரு வயது குழந்தை கம்மா வீட்டிலும் (நமதூரில்) வளர்ந்து வந்தது. ஏதாவது ஒரு விசேசத்தில் ஊரில் சந்தித்து கொள்வார்கள். அன்றைக்கும் அது போல வந்திருந்தார். மகளுக்கு ஐந்து வயதாகிறது. உடம்பு அடிக்கடி சரியில்லாமல் போய் விடுகிறது. பிள்ளையும் எங்களுடன் ஓட்ட மாட்டேன் என்கிறாள் என்று. அக்குழந்தைக்கு அப்பருவத்தில் கிடைக்க வேண்டிய பெற்றவர்களின் அன்பையும் அரவணைப்பையும் உதாசினபடுத்திவிட்டு இப்பொழுது புலம்பி என்ன பயன்.

ஒரு கணவனாக மனைவிக்கும், தகப்பனாய் பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை 'அவர்கள்' அருகாமையிலிருந்தே செய்கின்ற வாய்ப்பிருந்தும் 'நிறைய சேமிக்க' வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மனைவி/மக்கள் ஒருபுறம்... தான் மறுபுறம் என வாழுந்து வருபவர்களும் உண்டு. பணம் முக்கியம்தான்... ஆனால் வெளியுலகத்தில் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அறியும் (அதை அறிந்து திருத்தும்) வாய்ப்பு தாயை விட தந்தைக்குத்தான் உள்ளது. எந்த குழந்தைகள் தாய் தந்தையரின் முழு பராமரிப்பில் வளர்கிறதோ அக்குழந்தைகள் 'வழிதவறி' போவதற்க்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் பிள்ளைகள் தாயிடமிருந்து கற்க வேண்டிய நல்லொழுக்கங்களை தாயிடமும் அதேபோல் தந்தையிடமும் கற்கிறார்கள்.

‘மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)

ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்தால், பெரும்பாலான பிள்ளைகளின் குணாதசியங்கள் (நல்லதோ/கெட்டதோ) பெற்றவர்களை போன்றே இருக்கும். நாம் எதை செய்கிறோமோ அல்லது எதன்படி நடக்கின்றோமோ அதுமாதிரி தான் நமது பிள்ளைகளும். நம் குழந்தை ஒழுக்கத்திலும் மார்க்கத்திலும் நன்நடத்தையிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் இவையனைத்தும் நம்மிடத்தில் 'முதலில்' ஏற்படவேண்டும். நமது நடவடிக்கைள் ஒவ்வொன்றும் இஸ்லாத்திற்கு உட்பட்டு அமைய வேண்டும். 

முந்தையகாலம் போல் மார்க்க அறிவுடன் கூடிய உலக கல்வி போய் 'உலக கல்வியே' வாழ்க்கை என்று இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர். சிலவருடங்களுக்கு முன் அமெரிக்காவில் வசிக்கும் நமதூரை சார்ந்த பையனிடம், ஹலால் இறைச்சிக்கு என்ன செய்கிறாய் என்றேன். எந்த இறைச்சியாக இருந்தால் என்ன காக்கா...அதை சாப்பிடும் பொது 'பிஸ்மி' சொல்லி சாப்பிட்டால் 'எல்லாம்' ஹலாலாகி விடும் என்று வியப்பில் ஆழ்த்தினான். 

கலாச்சாரதிற்க்கும் ஒழுக்கத்திற்கும் பெயர்போன நமது நாட்டிலேயே/ஊரிலேயே பிள்ளைகளை நல்லபடியாகவும் ஒழுக்கமாகவும் வளர்ப்பதில் இவ்வளவு சிரமம் என்றால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் (அதாவது காலாச்சார சீரழிவுக்கும் தனிநபர் சுதந்திரத்திற்க்கும் பெயர் போன) தங்கள் பிள்ளைகளை இஸ்லாமிய முறையில் ஒழுக்கத்துடனும் நற்பண்புகளுடனும் வளர்க்க விரும்பும் நம்மவர்கள் படும் கஷ்டத்தை இங்கே எழுதி மாள முடியாது. இது போன்ற நாடுகளில் முஸ்லிம் பெற்றோர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படுவது 'இஸ்லாமிய முறையில் குழந்தை வளர்ப்புதான்'. இலவசமாக படிப்பு கிடைக்கும் 'பப்ளிக்' ஸ்கூலில் படித்தால் எங்கே தனது பிள்ளைகள் கெட்டு விடுவார்களோ என்பதற்க்காக, மாதம் $500 - $750 வரை செலவு செய்து தனியார் இஸ்லாமிய பள்ளிகூடங்களுக்கு அனுப்புகின்றனர். ஆனால் இந்நிலை நமது நாட்டில் இல்லை. இன்னும் அமெரிக்காவில் தொலைகாட்சியில்லாத, தேவைக்கு மட்டும் கணினியை பயன்படுத்த தரும் எத்தனையோ இஸ்லாமிய வீடுகளும் உண்டு. ஆனால் இன்று தொலைகாட்சி இல்லாத வீடுகளே நமதூரில் இல்லை. கணினிகளும் மடிகணினிகளும் தேவையில்லை என்றால் கூட... இன்றைய இளைய தலைமுறை கைகளில் கொடுத்து அழகு பார்ப்பதை பெருமையாக நினைக்கிறோம்.

குழந்தைகள் பெற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 'அமானிதம்' என்பதை மறந்துவிட்டோம். அமானித மோசடி செய்து மறுமையிலே இறைவனின் முன்பு நஷ்டவாளிகளாக ஆகிவிடக்கூடாது. குழந்தைகளை முறையாக வளர்க்கவில்லையெனில் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும். பெற்றோர்கள் 'உண்மையான' முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே இஸ்லாமிய சிந்தனையில் வளர்கிறார்கள் ஒரு வேளை 'பெயர் தாங்கி' முஸ்லிமாக இருந்தால் அவர்களும் பெயரளவிலே முஸ்லிம்களாக வளர்கிறார்கள் என்பதனை நாம் கண்கூடாகவே காண்கிறோம். பல பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்துவிடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். பெற்றெடுத்தக் குழந்தைகளை சரியான அடிப்படையில் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்ப்பதில் தான் பெற்றோரின் திறமையும் கடமையும் அடங்கியுள்ளது. 

"உங்கள் பொருள்களும் உங்களின் குழந்தைகளும் (உங்களுக்கு சோதனையே...இந்த சோதனையில் வெற்றி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடம் மிகப் பெரிய மகத்தான கூலி இருக்கிறது (அல்குர்ஆனா 64:15) என்பதனை மனதில் கொண்டு, எல்லாப் பெற்றோர்களும் இஸ்லாம் கூறும் அழகான குழந்தை வளர்ப்பு முறையை நடைமுறை படுத்தினால், வளரும் குழந்தைகள் முழுக்க முழுக்க இறைவனுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அப்பேர்பட்டவர்களில் ஒருவராக நாமும் ஆகி...நமது பிள்ளைகளுக்கு ஒரு உண்மையான முன்மாதிரியாக (ரோல் மாடல்) இருக்கும் பாக்கியத்தை வல்ல இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!!

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு சில உதாரணங்கள் யாருடைய மனதையும் காயபடுத்துவற்க்காக அல்ல.

--- அபு ரய்யான். 

(அல்லாஹ் நாடினால் தொடரும்)

நன்றி  : காயல்பட்டிணம்.காம்

Saturday, February 18, 2012

இட ஒதுக்கீடு மட்டுமே தீர்வைத் தருமா?



மத்திய அரசுப் பணியிலும் கல்வியிலும் பிற்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டில் நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், கிருத்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள் ஆகியோருக்கு உள் ஒதுக்கீடாக 4.5 % வழங்கப்போவதாக மத்தியில் ஆளும் காங்.தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

வடக்கே 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இருப்பதை வைத்து காங். கட்சி தனது நீண்ட நெடுநாளைய சித்து விளையாட்டை மீண்டும் விளையாடி வருகிறது. குறிப்பாக உ.பி.யில் வாழும் 19% முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்துதான் இந்த அறிவிப்பை செய்துள்ளனர். விடுதலையடைந்த 63 ஆண்டுகளில் அதிகப்படியாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தவர்கள் காங்.கட்சியினர்தான். இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து ஆதரவு தந்துவந்த முஸ்லிம் சமூகத்தை இன்னமும் எத்தனை காலத்திற்குத்தான்  இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை?
முஸ்லிம் சமுதாயம் எந்தவிதத்திலும் ஏற்றம் பெற்றுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் காங். கட்சியினர்? நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா அவர்களும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசிற்கு செய்த பரிந்துரைகளில் பகுதி அளவிற்கு நிறைவேற்றினால் கூட போதும் முஸ்லிம் சமுதாயத்தின் சிக்கல்கள் சிலவற்றிற்கு நிச்சயம் தீர்வு கிடைத்திருக்கும்.

முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம் ஆகிய துறைகளில் நிலவும் பின்னடைவுகளை தீர்ப்பதற்கான முஸ்லிம்களின் கோரிக்கை ஒருவிதமாகவும் அரசின் அறிவிப்புகள் வேறு விதமாகவும் உள்ளது. இல்லாத ஊருக்கு பாதை காட்டுகின்ற வேலையை அரசு செய்கிறது. மத்தியில் காங். கட்சிக்கு மாற்று இல்லாததால் வேறு வழியில்லாமல் சிறுபான்மைச் சமூகம் தேர்தலில் தொடர்ந்து ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இடஒதுக்கீடு போன்ற ஒருசில நலத்திட்டங்களால் மட்டுமே முஸ்லிம் சமுதாயம் முன்னேறிவிடுமா என்பதை மத்தியில் இட ஒதுக்கீடு வேண்டும் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓயாமல் ஒலித்து வரும் முஸ்லிம் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தாத ஜமாஅத் அமைப்புகளோ சமூக இயக்கங்களோ கிடையாது என்ற அளவிற்கு வலியுறுத்தி, வற்புறுத்தி வாங்கப்பெற்ற 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் இன்றைய நிலை என்ன? என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கும் செயல்திட்டம் எந்த அமைப்பிடமும் இல்லை!

தமிழகத்தில் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் ஒட்டு மொத்த வெளிப்பாடு முஸ்லிம்களுக்கு தீமையே தவிர நன்மை கிடையாது. ஆண்டிற்கு 30-40 இடங்கள் மருத்துவப் படிப்பில் அதிகமாக இடம் கிடைக்கிறது. அது மட்டுமே 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டால் விளைந்த ஒற்றைப் பயன். ஆனால், மருத்துவ மேற்படிப்பில் இந்த இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது. பொறியியலில் இடஒதுக்கீடே தேவையில்லை! காரணம் அரசு ஒதுக்கீட்டு இடங்களே இந்த ஆண்டு 45 ஆயிரம் இடங்கள் சீண்டுவதற்கு ஆள் இல்லாமல் கிடக்கின்றன. இது உயர் கல்வியில் உள்ள நிலை.

வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ‘நேர்மை’  அனைத்து நாளிதழ்களிலும் அன்றாடம் நாறுகிறது. தமிழகத்திலேயே ஊழலுக்கு பெயர் பெற்ற நமது வக்ஃபு வாரியத்தையெல்லாம் விஞ்சிவிடும் போல் இருக்கிறது. பணம் வாங்கிக் கொண்டு தகுதியற்றவர்களையும் பதிவு மூப்புத் தகுதியில் வராதவர்களையும் பணியமர்த்தி ஊழலின் ஊற்றுக் கண்ணாக இன்றைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூனி குறுகிக் கிடக்கிறது. உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும், வழக்குகளால் சிக்கித் தவிக்கிறது தமிழகத் தேர்வாணையம்.

இந்த ஊழல் சுனாமியில் முஸ்லிம்களின் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சிக்கி சின்னாபின்னமாகி விட்டது என்றே சொல்லலாம். எந்தெந்த துறைக்கு எத்துனை இடங்கள் காலியாக உள்ளன. எவற்றுக்கெல்லாம் தேர்வுகள் நடக்கின்றன. எந்தெந்த சமூகத்திற்கு எத்துனை இடங்கள் அதில் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? இதுபோன்ற பெருவாரியான கேள்விகளுக்கு விடைகாண முடியாத நிலையில்தான் தேர்வாணையம் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, சில முக்கிய பொறுப்புகளுக்கு தகுதியான முஸ்லிம் பட்டதாரிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கால்நடை மருத்துவர்கள் 850 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஏறக்குறைய 30 இடங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் 4 முஸ்லிம்கள் மட்டுமே கால்நடை மருத்துவம் படித்தவர்களாக இருந்துள்ளனர்.

கால்நடை மருத்துவம் என்பது மருத்துவமும் தொழிலும் இணைந்த பாரம்பர்யமான படிப்பு அரசுப் பணிக்குத் தொடக்கமே ஏறக்குறைய 20-30 ஆயிரம் ரூபாய் ஊதியமாகக் கிடைக்கும் பணி. ஆனால் இந்தப் படிப்பு குறித்து முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் தேவைப்படும் அளவிற்கு பட்டதாரிகள் இல்லாததால் பற்றாக்குறை நிலவுகிறது. ஆகையினால் இட ஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சிக்கலை தீர்ப்பதற்கான சரியான தீர்வு அல்ல.

மத்தியில் இட ஒதுக்கீடு கேட்டு அல்லது தமிழகத்தில் உள்ள 3.5 விழுக்காட்டை அதிகப்படுத்திட வேண்டி நடத்தப்படுகின்ற மாநாடுகள் போராட்டங்களுக்கு பதிலாக இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்கு கொடிபிடிக்கும் தொண்டர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் பள்ளிக் கூடங்களை உருவாக்கினாலே போதும். முஸ்லிம் சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும். மேலும் தரமான கல்வியை இஸ்லாமிய அடிப்படையில் கொடுப்பது என்ற முடிவை அமைப்புகளின் தலைவர்கள் எடுத்தாலே போதும். முஸ்லிம் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு ‘அம்மா’விடமும் ‘அய்யா’விடமும் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. முஸ்லிம் சமூகம் அடுத்து வரும் காலங்களில் அனைவரையும் மிஞ்சும் தகுதியோடு பொதுப் பட்டியல் முழுக்க ஆக்கிரமிப்பு செய்யும் சமூகமாக மாறிவிடும்.
இவ்வளவு குளறுபடிக்குப் பிறகும் இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது ஒரு வகையில் தங்களது அரசியல் இயலாமையை மறைப்பதற்குதான் அமைப்புகளால் முன்வைக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது?

-நன்றி :  CMN சலீம்
http://www.samooganeethi.org/

Friday, February 10, 2012

அந்த மாணவனின் கையில் யார் கத்தியைக் கொடுத்தது?



நேற்றைய தொலைக்காட்சிகளிலும், இன்றைய பத்திரிகைகளிலும் இதுவே முக்கிய செய்தி. தன்னை நோக்கி கத்தியுடன் வந்த மாணவன் இர்ஃபானைப் பார்த்து டீச்சர் உமாமகேஸ்வரிக்கு வந்த பயமும், பதற்றமும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இன்று வந்திருக்கிறது. அதனை  எதிர்கொள்ள, தப்பிக்க அல்லது முறியடிக்க  கூடவே சிந்தனைகளும் முளைக்கின்றன.

“அந்தச் சிறுவன் ஒரு மனநல நோயாளி”,  “அவனைத் தூக்கில் போட வேண்டும்”,  “வளர்ப்பு சரியில்லை எனவே பெற்றோரையும் தண்டிக்க வேண்டும்”,  “சினிமாக்களும், தொலைக்காட்சிகளும்தான் இதுபோன்ற வன்செயல்களுக்கு வித்திடுகின்றன” இப்படியான கருத்துக்கள் அதிகமாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

“யாரும் பெயில் கிடையாது என்னும் பெயரை சம்பாதிக்க  பள்ளிகள் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளே காரணம்”,   “ மார்க்குகளை மட்டுமே முக்கியமாகக் கருதும் இந்தக் கல்விமுறையே காரணம்”, “தொடர்ந்த  கட்டாயங்களால் ஏற்படும் மன அழுத்தம் இதுபோன்ற குற்றங்களுக்கு கொண்டு செல்கிறது” என நிதானமாக கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

இவைகள் வெறும் உணர்ச்சிகளின் தரப்பிலிருந்தும் அல்லது  முற்றிலும் அறிவின் தரப்பிலிருந்தும் சமூகத்தின் முன்னே நடத்துகிற உரையாடல்களாகத் தெரிகின்றன.  தற்காலிகமான ஆனால் உடனடியான தீர்வுகளுக்கான அல்லது நிரந்தரத்தீர்வுகளுக்கான  வழிகளை ஆராய்வதாக இருக்கின்றன. இவைகள் யாவிலும் உண்மைகளின் கூறுகள் இருப்பினும், மனித மனங்கள் பற்றி நிறைய பேச வேண்டியிருகிறது நாம். ஒரு கொலை, அதன் பின்னணி, கொலை செய்யப்பட்டவர், கொலை செய்தவர், ஆயுதம்,  சாட்சிகள் என்ற ரீதியில் இதனை ஒரு கேஸ் கட்டுக்குள் அலசிடமுடியாது.

கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் மகள் தொலைக்காட்சியில் பேசுவதைப் பார்க்க  கஷ்டமாயிருந்தது. “எங்க அம்மா ரொம்ப நல்லவங்க. எல்லார்ட்டயும் அன்பா இருப்பாங்க” என்று குரல் தழுதழுக்கச் சொல்லும்போது நமக்கும் தொண்டை அடைக்கிறது.  எப்பேர்ப்பட்ட இழப்பு அந்த குடும்பத்துக்கு. இனி அதை யாரால், எப்படி திரும்பக் கொண்டு வந்து சேர்த்துவிட முடியும்? அந்தக் கேவல்களை எப்படி நிறுத்த முடியும்?

“நான் தவறு செய்துவிட்டேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நான் என் பெற்றோர்களையும் பார்க்க விரும்பவில்லை” என இர்ஃபான் அளித்துள்ள வாக்குமூலம், அவன் தன்னை உலகிலிருந்தே துண்டித்துக் கொள்ள முயல்பவனாகக் காட்டுகிறது. “அந்த டீச்சர் கதறியது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது” எனச் சொல்வதில் அவன் அடையும் சித்திரவதை இருக்கிறது.

இப்படிப்பட்ட இர்ஃபான் கையில் கத்தியையும் அவனது சிந்தையில் தன் டீச்சரைக் கொல்ல வேண்டும் எனகிற வெறியை யார் திணித்தது? இரண்டுநாளாய் கத்தியை தனது புத்தக்கட்டுக்குள் வைத்து திட்டமிட்டு இருந்திருக்கிறான். தக்க தருணம் எதிர்பார்த்திருக்கிறான். ஒரு குத்து அல்ல. மாறி மாறி குத்தியிருக்கிறான். கையெடுத்துக் கும்பிட்ட பிறகும் குத்தியிருக்கிறான். அவ்வளவு ஆத்திம் அவனுக்குள் எப்படி விதைக்கப்பட்டது? இதுதான் பெரும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் என் மனைவி செய்தியை படித்துவிட்டு, “இப்போல்லாம் பிள்ளைங்கள எதுவும் சொல்லவே பயமா இருக்கு. உடனே அழுது தள்ளிருவாங்க. நிப்பாட்டவே மாட்டாங்க.” எனச் சொல்லி வந்தவள், “ஆனா,  எல்லோரையும் பொதுவா சத்தம் போட்டா அமைதியா இருப்பாங்க. அல்லது சிரிக்கக்கூடச் செய்வாங்க” என்றாள்.  “அதே மாதிரி, தனியா அழைத்துப் போய் கடுமையாப் பேசினாலோ, புத்திமதி சொன்னாலோ கேட்டுக்குவாங்க. அழல்லாம் மாட்டாங்க. ஆனா அதுக்குல்லாம் எங்க நேரம்? ஒரு வகுப்பிலேயே நாப்பது ஐம்பது புள்ளைங்க இருக்காங்க” என்றும் சொன்னாள். இந்த இடம்தான் வெளிச்சம் காட்டுவதாக இருக்கிறது.

இன்றைய குழந்தைகள் பொதுவெளியில் தங்களுக்கு ஒரு தோல்வியோ, அவமானமோ நிகழ்ந்தால்  அதனைத்  தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். தவறுகளை எப்படி யாருக்கும் தெரியாமல் செய்கிறார்களோ அதுபோல  தண்டனைகளையும் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அனுபவித்துவிட  தயாராய் இருக்கிறார்கள். வெளிப்படையாய் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ள மருக்கிறார்கள். மனித மனத்தின் பொதுவான தன்மைகள் இவற்றிலிருப்பினும் இன்றைய குழந்தைகள் மிக தீவீரமாகவும், நுட்பமாகவும் இவ்விஷயத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் உலகில் அவர்கள் தங்களை மட்டுமே மிக அதிகமாக நேசிக்கிறார்கள். அதல் சிராய்ப்புகள் வருவதைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தங்களிடமிருக்கும் இந்த அன்பை எப்படி உலகம் முழுமைக்கும் அவர்களை பரிமாற வைப்பது என்பதுதான் இன்றைய சமூகத்தின் சவால். நிகழ்காலத்தின் கேள்வி. டீச்சர் உமா மகேஸ்வரியின் மரணம் இரத்தம் சிந்த சிந்த படுகொலையாக நிகழ்த்தப்பட்ட புள்ளி இதுவாகவும் தெரிகிறது.

ஒருவேளை, நேற்று வகுப்பறையில் உட்கார்ந்திருந்த உமாமகேஸ்வரி டீச்சர், அந்த மாணவன் உள்ளே நுழைந்ததும்,  “வா, இர்ஃபான் முதல் ஆளா கிளாஸுக்கு  வந்திருக்கியே. சந்தோஷமாயிருக்கு. இப்படி இருந்தா நீ எவ்வளவோ சாதிக்கலாமே” என்கிற தொனியில் பேசி முகம் மலர்ந்து வரவேற்றிருந்தால் அந்தக் கத்தி இர்ஃபானின் பையிலேயே இருந்திருக்கலாம். உமா மகேஸ்வரி அவர்களும் இப்போது ஒரு வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்திருக்கலாம். நானும், நேற்றைய பதிவுக்கு nellaiconspiracy என்னும் நண்பர் கேட்டிருந்ததற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்திருக்கலாம்.

யோசித்துக்கொண்டே இருக்கிறேன். கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

நன்றி : தீராத பக்கங்கள்