Friday, November 29, 2013

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கூடாது..!


இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் மத்திய அரசுக்கு எதிராகவும் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சினுக்கு பாரத ரத்னா :

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தனது 200வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்றார். இந்த டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வும் பெற்றார் சச்சின். கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை பாராட்டும் விதமாக அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தனது அரசியல் ஆதாயத்திற்காகவே சச்சினுக்கு எம்.பி., பதவி அளித்ததாகவும், தற்போது 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் கோடிக்கணக்கான சச்சின் ரசிகர்களின் மனநிலையை மாற்றி, அவர்களின் ஓட்டுக்களை பெறவதற்காகவே மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. பாரத ரத்னா விருது அறிவிப்பை திரும்பப் பெற கோரிக்கை விடுக்கப்பட்டும், மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மாறாக சச்சினை காங்கிரசிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திட்டமிட்டது.

ஐகோர்ட்டில் மனு :

சச்சினுக்கும், வேதியியல் நிபுணரான சி.என்.ராவிற்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் கனகசபை என்ற வழக்கறிஞர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சச்சினுக்கும், சி.என்.ராவ்விற்கும் பாரத ரத்னா வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாரத ரத்னா விருதிற்கான தேர்வில் மத்திய அரசு, விதிமுறைகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை எனவும் கனகசபை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாரத ரத்னா விருது பெற சச்சினுக்கு தகுதி இல்லை எனவும், விரது அறிவிக்கப்படுவதற்கு முன் அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும், அரசாணை இல்லாமல் விருது அறிவித்தது தவறானது எனவும், மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய ஐகோர்ட் பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் அமிதாப் தாகூர் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.