பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் வேகமாக இருப்பதால் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி பரவலாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு பிளஸ் 2 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன் மூலம் ப்ளஸ் 2 தேர்வுகள் நடைபெறுவது உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா முதல் அலையை விட தற்போது நோய் பாதிப்பு மிக வேகமாக உள்ளது. கடந்த முறை தினசரி தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொட பல நாட்கள் எடுத்துக் கொண்டது.

ஆனால் இந்த முறை வெகு சில நாட்களில் தினசரி தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதனிடையே 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், தேர்வுகள் நடைபெறும் ஆய்வகங்களின் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்தே வைத்திருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மாணவர் குழுவின் செய்முறை தேர்வுக்கு முன்னரும் பின்னரும் அறைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் எனவும், கருவிகளையும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சானிடைசர் அருகே தீப்பற்றக் கூடிய பொருட்களை வைக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு குணமடைந்தபின் வேறு ஒரு நாளில் செய்முறைத் தேர்வு நடத்தலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
newstm.in
No comments:
Post a Comment